Friday, April 19, 2019

இயல்பானது, இயற்கையானது...

எப்போது, எவருடன் நிகழுமென யாரறிவார்...? இயல்பானதும், இயற்கையானதுமே... காதல்.

https://www.youtube.com/watch?v=VWU51Q2n3h4

Thursday, April 11, 2019

கன்னித்தீவு

காட்சி 1:
நிழற்படம் மூலம் முதல் சந்திப்பு; கண்கள்தான் முதன்மையாக ஈர்த்தன. இரண்டாவது பிசிரில்லாத, தெளிந்த முகம். இறுதியாகப் அந்தச்சிரிப்பும், நிறமும்.

காட்சி 2:  
நெடுநாட்களுக்குப்பின்... தொலைவில் நாம் கண்டுகொள்கின்றோம்; ஒருநொடிப் பொழுதுதான் - அதோடு சரி.

காட்சி 3:  
மற்றொரு நாள்... நண்பகல் உணவுவேளை, எனக்கெதிர் மேசையில் நீ. நம் முதல் பேச்சு; உன் நண்பனை அழைக்க என்னிடம் தயக்கத்தோடு கோருகிறாய், அவர் பெயரை உன்னிடம் ஒருமுறை உறுதிசெய்துகொண்டு, அவரை அழைத்தேன். ஒருநிமிடப் பொழுதுதான் - அதோடு சரி.

காட்சி 4:  
மீண்டும் நெடுநாட்கள் இடைவெளி... இம்முறை அலுவல் தொடர்பாக; மின்னஞ்சல் ஊடாக. எனவே நொடிகளோ நிமிடங்களோ தேவைப்படவில்லை.

காட்சி 5:  
அவ்வப்போது தொலைவில் தென்படுவாய் - அதோடு சரி.

காட்சி 6:  
இதுவரை நான் இவற்றையெல்லாம் நினைவுகூர்ந்ததில்லை. மிகச்சில நாட்களாக, அருகருகே எதிர்ப்பட நேர்கின்றது; சிற்சில நொடிப் பார்வைகள்தாம், ஆனால் தீர்க்கமானவை. இதுவே தொடர, என் மனம் முன்நகர, அனைத்தையும் அசைபோடுகின்றேன்.

காட்சி 7 & 8:  
அடுத்தகட்ட நகர்வாக, பேச முயன்றேன்; உடலும், மனமும் உதற ஒருவழியாக வென்றேன். இருமுறை; அலுவல் தொடர்பாக - அதோடு சரி.

காட்சி 9 & 10:  
மிகச்சில நாட்களாக, அருகருகே எதிர்ப்பட நேர்ந்தது. இருமுறை; புன்னகைத்துக்கொண்டோம் - அதோடு சரி.

காட்சி 11:
சந்திக்காமலேயே சில நாட்கள் கழிந்தன; தற்போது பேச வாய்ப்பதில்லை. தொலைவிலேயே தென்படுவதால் புன்னகைக்கவும் வாய்ப்பதில்லை. கண்டும் கதைக்க இயலவில்லை எனும்போது கனக்கிறது இதயம். இந்நிலை மாறுமா? ஏதேனும் நிகழுமா? அல்லது இதுவே தொடருமா?