Friday, July 8, 2011

இழப்பு

பற்றிஎரிவதென்பது நெருப்பின் தன்மை, அதற்கேற்ப பொங்குவது என்பது பாலின் தன்மை. அதுவே கிண்ணம் தாண்டுகையில், உடன் நீர் சேர்க்க பொங்குதல் அடங்கும். விறகு தீர, சருகு கொண்டு சூடேற்றப்படுகின்றது. முடிவில் நெருப்பதன் நிலை மாறாமலிருக்க, மிகை நீர் உட்கொண்ட பால் அதன் தன்மையற்றுப் போவதே "இழப்பு"

அவன் - இவன் (திறனாய்வு)

மாடுகளை இறைசிக்காக விற்பவனை (ஆர்.கே) காவல் துறையிடம் காட்டிக்கொடுக்கிறார் ஒரு பாளையத்தார் (ஜி. எம். குமார் - ஹைனஸ்). சிறையிலிருந்து வெளியே வரும் ஆர்.கே, ஹைனசைகக் கொல்கிறான். கொன்றவனைப் பழி வாங்குகிறார்கள் ஹைனசின் வளர்ப்புகள் (விஷால் - வால்டர் வணங்காமுடி , ஆர்யா - கும்பிடறேன் சாமி). இம்மிகச்சிறிய மையப்புள்ளியை, களவுத்தொழில் செய்வோரின் வாழ்க்கையின் ஊடாகக் (களவு செய்வதை எங்கும் காட்சியாக்காமல்) கதைப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். அப்பனின் இரு தாரத்துப் பிள்ளைகள் விஷாலும் (அம்பிகா), ஆர்யாவும் (ஜெயப்ரபா). பாளையத்தாருக்கும், களவுக்குடும்பத்துக்குமான பிணைப்பு அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. அதிகாரங்களே அற்ற பாளையத்தாரின் பாத்திரப்படைப்பும், அதற்கான தேர்வும் மிகப்பொருத்தம். கலைஞாகவும், களவானியாகவும் வருகிற விஷால் கதையின் பலம். எவ்வித வித்தியாசங்களும் இல்லாத பாத்திரப்படைப்பான ஆர்யாவும் பார்வையாளனுக்கு நெகிழ்ச்சியூட்டுகிறார். மொத்தமே பத்து நிமிட வருகை தான்; மிகச்சிறப்பாக பார்ப்போரை மிரள வைக்கிறார் ஆர்.கே. இவர்களைக்கொண்டு ஒரு கலகலப்பான படத்தைக்கொடுத்துள்ளார் இயக்குனர்.

காட்சிகளோடு ஒன்றிப்போகிற உரையாடல்கள்; வாழ்க்கையின் உதிரிகளை கதை மாந்தர்களாக்கியது - இவ்விரண்டிற்காக மட்டுமே இயக்குனர் கொண்டாடப்பட வேண்டியவர்.